விடியா திமுக வாக்குறுதி அளித்ததுபோல வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க வேண்டும் என பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடியா அரசின் மற்ற வெற்று வாக்குறுதிகள் போல இதுவும் கடந்துபோகுமா? இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் இன்னும் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைப்பதற்காக துரும்பைக் கூட விடியா அரசு கிள்ளிப்போடவில்லை…
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என ஜீவகாருண்யத்தின் அருமைகளை உலகுக்கு எடுத்துரைத்தவர் வள்ளலார். கடலூர் மாவட்டம் வடலூரில் 1867 ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க தரும சாலை நிறுவப்பட்டது. அன்று முதல், ஜாதி, மத, பாகுபாடின்றி அனைவருக்கும் மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தரும சாலையில் அன்று எரிய தொடங்கிய அடுப்பு 155 ஆண்டுகளாக அணையாமல் எரிந்து மக்களின் பசிப்பிணியை போக்கி வருகிறது. மழை, வெள்ளம் என, இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது கூட அன்னதானம் தொடர்ந்து நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கூட, அதிகமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வடலூரில் சர்வதேச மையம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தது. ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வித பணிகளையும் விடியா அரசு துவக்கவில்லை. சட்டமன்றத்தில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, சில நாட்களில் அமைச்சர்கள் சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வடலூர் சத்திய ஞானசபை அமைந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி வள்ளலாரின் சர்வதேச மையத்தில், பல்வேறு நவீன வசதிகளோடு வள்ளலாரின் வரலாற்றையும், அவரது கொள்கைகளையும் இந்த உலகம் அறியும்படி சர்வதேச மையம் இந்த வளாகத்திலேயே உருவாக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், விடியா அரசின் பேச்சுகள் வெறும் ஆய்வோடு நின்றுபோனது.
அதுபோல வள்ளலார் அவதார இல்லமான புவனகிரி அருகே உள்ள மருதூர் இல்லத்தையும், சர்வதேச தரத்தில் புதிய இல்லமாக மாற்றி அமைக்க வேண்டும் எனும் கோரிக்கை பல்லாண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு கூட மாவட்ட நிர்வாகம் சார்பில் வள்ளலார் பிறந்த இல்லத்தை ஆய்வு செய்துள்ளனர். ஆனால் இதற்கான எந்த சிறப்பு நிதியும் அறிவிக்கப்படவில்லை. இன்னமும் வள்ளலார் பிறந்த இல்லம் பழமையான கட்டடத்தில் இருந்து வருகிறது. வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும் அதே நேரத்தில், அவரது பிறந்த இல்லமான மருதூரிலும், நவீன தரத்திலான புதிய இல்லம் உருவாக்க வேண்டும், வடலூரையும் மருதுரையும் இணைக்கும் வகையில் அதிக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது வள்ளலார் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த மையம் அமைந்தால் வள்ளலாரின் உயரிய கொள்கைகள் தமிழகம் மட்டுமல்லாமல், உலகளவில் உள்ள பலரையும் சென்றடையும். எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் உடனடியாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் உருவாக்கிட பணிகளை துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.