திமுகவின் கடந்த 22 மாத ஆட்சியில் தினந்தோறும் அரங்கேறும் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வாழ்க்கையை நடத்துகின்றனர். சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய நிலையில், முதலமைச்சர் கூறியது பச்சை பொய் என தோலுரித்து காட்டுகிறது இந்தப் பதிவு.
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலத்தில் அரசின் செயலற்ற காவல்துறையால் 22 கொலை சம்பவங்களும், 5 க்கும் மேற்பட்ட கொலை முயற்சி சம்பவங்களும், 50 க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அரங்கேறியுள்ளன. குறிப்பாக கஞ்சா போதையை கட்டுப்படுத்த காவல்துறை தவறியதால், உயர்ரக கஞ்சாவை வீட்டில் வைத்து வளர்த்து விற்பனை செய்யும் நிலைக்கு தமிழ்நாட்டின் நிலை மோசமாகியுள்ளது.
கடந்த 7 நாட்களில் மட்டும் திண்டுக்கல்லில் 4 கொலைகளும்,கோவையில் 3 கொலைகளும், சென்னை, திருப்பூர், தென்காசி, கடலூர் ஆகிய பகுதிகளில் தலா 2 கொலைகளும், கரூர், வேலூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மதுரை, விழுப்புரம், தேனி ஆகிய பகுதிகளில் தலா 1 கொலை என மொத்தம் 21 கொலைகள் நடந்துள்ளன. இதில் 7 மாத பிறந்த குழந்தையும், 7 பெண்களும் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அரங்கேற மூல காரணமாக இருக்கும் கஞ்சா போதை பொருள் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திர பாபு கூறிய நிலையில் தலைநகரான சென்னையில் வீட்டில் ஏசி வைத்து, நவீன தொழில்நுட்பங்களுடன் கஞ்சாவை வளர்த்து விற்பனை செய்து வந்த சம்பவம் காவல்துறையின் போலி முகத்திரையை கிழித்துள்ளது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கெட்டு, தமிழ்நாடு அச்சுறுத்தும் மாநிலமாக மாற்றப்பட்டு வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு பற்றி பொய்யாக கூறிய கருத்தை முதலமைச்சர் திருப்பி பெற்றுக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்