நீட் தேர்வை கொண்டு வந்து, மாணவர்கள் 13 பேரின் உயிர்களை காவு வாங்கியதே திமுக தான் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் நீட் தேர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்தார். இதற்காக மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்திய நிலையில், அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, திமுக ஆதரவோடு தான் காங்கிரஸ் அரசு நீட் தேர்வு கொண்டு வந்ததாகவும், நீட் மசோதாவுக்கு திமுக முட்டுக் கொடுத்ததாகவும் சாடினார்.
இதனால் அவையில் அதிமுக – காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு நின்று கூச்சலிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அமைதிக் காக்குமாறு சபாநாயகர் தனபால் கோரிக்கை விடுத்தார். பின்னர் அவையை சுமூகமாக நடத்தவிடாமல் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு யாருடைய ஆட்சியில் இந்தியாவுக்குள் நுழைந்தது என்பது வரலாறு என்றும், வரலாற்றை யாரும் திரித்துக்கூடாது என்றும் தெரிவித்தார். அமைச்சரை பேச விடாமல் குறுக்கிட்டு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்தியதை அடுத்து, பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக விளக்கமளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ்- திமுக கூட்டணி தான் என்பது நாட்டுக்கே தெரியும் என தெரிவித்தார். 13 பேரின் உயிர்கள் பறிபோனதற்கு துணை போனது திமுக தான் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 2013ஆம் ஆண்டு சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வு வேண்டாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பெற்றது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக் குறிப்பிட்டார். இதையடுத்து மறுசீராய்வு மனுவில் நீட் தேர்வு வேண்டாம் என்று இந்தியாவுக்காக குரல் கொடுத்ததே அதிமுக அரசு தான் என்றும், ஆனால், 2017ஆம் ஆண்டில் நீட் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டினார். நீட் தேர்வில் இருந்து 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்காமல், ஒராண்டு மட்டுமே மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தது எனக் கூறிய அமைச்சர், இந்த வரலாற்றை மறைத்து அரசியல் செய்வது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு நிகழ்வு போன்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விலக்கு பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிகட்டு ஒரு மாநிலத்தின் பிரச்னை எனக் குறிப்பிட்டார். ஆனால், நீட் தேர்வு அனைத்து மாநில பிரச்னை என்பதால், கடைசி வரை நீட் தேர்வுக்கு எதிராக விலக்கு பெறுவதில் வழிவகை இல்லை என்றும், ஊசியில் நூல் நுழையும் போன்ற வாய்ப்பு கிடைத்தாலும், நீட் தேர்வில் அதிமுக அரசு விலக்கு பெறும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்தார்.