"மாதாந்திர மின் கணக்கீட்டை செயல்படுத்துக"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை திமுக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின் தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி,இதனுடைய உள்ளார்ந்த பொருள், நீட் தேர்வு ரத்து, ஏழு பேர் விடுதலை, கல்விக் கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் போல் இதுவும் குழிதோண்டி புதைக்கப்படும் என்பதுதான் என குறிப்பிட்டுள்ளார்.

உட்கட்டமைப்பு பணிகள் எப்போது முடிந்து இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்பதற்கு ஏதாவது கால அளவு இருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றும், அமைச்சரின் பேச்சு போகாத ஊருக்கு வழி சொல்வது போல அமைந்திருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.

எனவே உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்ட பின் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்பது இந்த வாக்குறுதி ‘அதோகதி’ என்பது சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வாக்குறுதியையும் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைளை மேற்கொள்ளும் திமுக அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு அண்ணா திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

 கொரோனா கொடுந்தொற்று, விஷம் போல் ஏறும் விலைவாசி, வேலையின்மை, ஊதிய உயர்வின்மை என பலப் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version