முன்னறிவிப்பின்றி குடிசை பகுதிகளை இடித்த திமுக அரசு

சென்னை கொளத்தூர் அருகே, மாற்று இடம் வழங்காமல் குடிசை பகுதிகளை இடித்த தமிழக அரசை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கொளத்தூர் பகுதிக்கு உட்பட்ட அவ்வை நகர் கிழக்கு லெவல் குறுக்கு தெரு பகுதியில், வில்லிவாக்கம் மற்றும் ஜி.கே.எம். காலணியை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பாலத்திற்கு தேவையான இடத்தை தர அப்பகுதி மக்கள் ஒப்புகொண்ட நிலையில், அப்பகுதி முழுவதையுமே ஆக்கிரமிப்பு எனக் கூறி, உடனடியாக வெளியேற நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இது குறித்து முதல்வர் தனிப்பிரிவிலும், அமைச்சர்களையும் சந்தித்து மனு வழங்கிய போதிலும், முறையான பதில் கிடைக்காத நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி வீடுகள் இடிக்கப்பட்டன.

மாற்று இடம் எதுவும் வழங்கமால் வீடுகள் இடிக்கப்பட்டதை அடுத்து, 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்றிவிட்டு பூங்கா அமைப்பது நியாயமா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குடிசையில்லாத தமிழகம் உருவாக்குவோம் என்று கூறிய திமுக, இருக்கும் வீடுகளை இடித்து வஞ்சிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், தமிழக அரசு தங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version