அதிகார மோதல் முற்றிப்போய் திமுக கவுன்சிலரும், வட்டச் செயலாளரும் நடு ரோட்டில் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது அதிகார மோதலால் தங்கள் பகுதியில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
இப்படி நடுரோட்டில் மோதிக் கொள்வது ஏதோ எதிர்கட்சி நிர்வாகிகள் அல்ல… திமுகவினர் தான். அதிகார மோதல் முற்றிப்போய் பொதுமக்கள் மத்தியில் நடுரோட்டில் சண்டையிடும் நிலைக்கு வந்துள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, 113 வது வார்டில் உள்ள ராமகாமாத்துபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஓ பிளாக்கில் சில மாடிகளில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதி 113 வார்டு திமுக வட்டச்செயலாளர் விஷ்ணு, குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை அழைத்து வந்து அதனை சரிசெய்ய முயன்றார்.
அப்போது அங்கு வந்த திமுக 113 வது வார்டு கவுன்சிலர் பிரேமா மற்றும் அவரது கணவர் சுரேஷ் ஆகிய இருவரும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகளிடம், “நாங்கள் தான் இந்த ஏரியா கவுன்சிலர். எங்களிடம் செல்லாமல் வேலை செய்வாயா” என ஒருமையில் பேசி வேலை செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.
வேலை செய்வதை தடுக்க வேண்டாம் என விஷ்ணு கூறியதால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் மற்றும் அவரது கணவர், அவரை சாதி பெயரை சொல்லி திட்டியதுடன், தடுக்க வந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்களையும், ஆபசாமாக பேசி தகராறில் ஈடுபட்டனர்.
வாய் தகராறு முற்றி கவுன்சிலர் பிரேமா மற்றும் அவருடைய கணவர் சுரேஷ் ஆகியோர் கோஷ்டிக்கும் வட்டச் செயலாளர் விஷ்ணு கோஷ்டிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டு கவுன்சிலரின் கார் உடைக்கப்பட்டது.
குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் செய்யாமல் அதிகாரப் போட்டியில் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் திகைப்புடன் பார்த்தனர்.
மோதல் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மக்கள் பிரச்சனை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக வட்டச் செயலாளரும், கவுன்சிலரும் நடு ரோட்டில் மோதிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.