சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கோயமுத்தூர், திருச்சி, ஓசூர், மைசூர், பெல்லாரி ஆகிய நகரங்களில் ஜி ஸ்கொயர் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவமானது இயங்கி வருகிறது. அக்டோபர் 12, 2012 ஆம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுவருகிறது. இந்த ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் இயக்குநர்களாக ஸ்ரீகலா மற்றும் ரங்கசாமி ராமஜெயம் மார்ச் 2018ல் இருந்து செயல்படுகிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சைலண்ட் இன்வெஸ்டராக இந்நிறுவனத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 50க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
குறைந்த காலத்தில் அதிக அளவு நிலத்தை கையகப்படுத்தியது மற்றும் அதிக அளவு வருமானம் ஈட்டியது ஆகிய புகார்களின் அடிப்படையில் ஜி ஸ்கொயர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக் என்பவர் இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் என்பதால் ஈஞ்சம்பக்காத்தில் உள்ள அவரது பங்களாவிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜி ஸ்கொயர் நிர்வாகி பாலாவின் ஈசிஆர் வீடு, சபரீசனின் உறவினர் பிரவீன் வீடு ஆகிய இடங்களிலும் இந்த வருமான வரி சோதனை நடைபெறுகிறது.