இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற திமுக ஒன்றிய துணை செயலாளர் உட்பட 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூரில் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான செந்தூர்பாண்டியன் என்பவரின் மருமகள் ராமலட்சுமி என்பவர் கடலாடி 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் ஆறுமுகவேல் என்பவரின் அண்ணன் மகனான திருநாவுக்கரசு தோல்வியுற்றார். இதனை பொறுத்துக் கொள்ளமுடியாத திமுகவினர் செந்தூர்பாண்டியனை இரண்டு முறை கொலை செய்ய முயற்சி செய்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செந்தூர்பாண்டியனை திமுக ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகவேல் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் காரை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய செந்தூர்பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Discussion about this post