சமூகநீதி..சமூகநீதி என்று சொல்லி சொல்லியே ஆட்சிக் கட்டிலில் அரிதாரம் பூசிக்கொண்டு ஏறிய திமுக, காலம் போகப் போக தன் அலங்காரத்தைக் கலைத்துவிட்டு தன் சுயரூபத்தை ஒவ்வொரு செயல்பாட்டிலும் காட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கு நம்மால் ஏகப்பட்ட உதாரணங்களை எடுத்துக் கூற முடியும். ஆனால் இப்போது ஒரு குறுக்கு வழியை திமுக கையில் எடுத்தியிருக்கிறது. அதுதான் தொகுதியைக் கைமாற்றுவது.
யாரால் ஆட்சியைப் பிடித்தார்களோ, யாரால் வளர்ந்தார்களோ அவர்களையே கழட்டி விடும் உக்தியை கையாளயிருக்கிறது திமுக தலைமை. அதாவது வருகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளை மீண்டும் அந்தக் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறதாம். குறிப்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் உள்ளனர். அவர்களில் பலரும் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிடுவது திமுக சீனியர்களுக்கு கொஞ்சம் அதிருப்தியாக இருக்கிறதாம். அதனால் அக்கட்சிக்கான தொகுதிகளை இம்முறை மாற்றித் தர வலுவான திட்டம் ஒன்றினை திமுகவின் முக்கியஸ்தர்கள் தீட்டிவிட்டனர். அதுவும் வாரிசு அமைச்சரான விளையாட்டுப் பிள்ளை அமைச்சர் உதயநிதிக்கு எவர் விசுவாசமாக இருக்கிறாரோ அவருக்கே அந்த தொகுதிகள் என்று கட்டன்ரைட்டாக தலைமை சொல்லிவிட்டதாம். போகிற போக்கைப் பார்த்தால் அன்பில் மகேஷைத் தொடர்ந்து, பதவிக்கு ஆசைப்படும் பலரும் ரசிகர் மன்றத்தை எடுத்து நடத்த ஆரம்பித்துவிடுவார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் பேசி வருகின்றன.
அப்படியே கரூர் பக்கமாக சென்றால், சமீபத்தில் அமலாக்கத்துறையால் அஸ்திவாரத்தையே இழந்த செந்தில்பாலாஜிக்கும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளாக கடும் மோதல் போக்கு இருக்கிறதாம். செந்தில்பாலாஜியின் விசுவாசிக்கு கரூர் எம்பி சீட் கொடுக்க வேண்டும் என்று அம்மாவட்ட நிர்வாகிகள் திமுக மேலிடத்திற்கு சைஸாக காய் நகர்த்தி வருகிறார்கள் என்று தகவல் கசிந்துள்ளது. கரூர் திமுகவினரின் அட்ராசிட்டிகளை தாங்காமல் நான் ஈரோடுக்கோ திருச்சிக்கோ போய்விடுகிறேன் என்று ஜோதிமணி கொக்கரித்து வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கதைக்கின்றனர்.
கரூர் தான் இப்படி என்று பார்த்தால் மறுபுறம் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமாருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம் போன ட்ரிப்பில் சிதம்பரத்தில் நின்ற விசிக தலைவர் திருமாவளவன், இம்முறை திருவள்ளூர் வேண்டும் என்று அடம்பிடித்துள்ளாராம். அதற்கு காரணம் போன தடவை ஜெயிப்பதற்கு இறுதிவரை போராட வேண்டிய சூழல் திருமாவளவனுக்கு ஏற்பட்டது. அதில் திமுகவின் உள்குத்தும் இருக்கிறது என்று அரசல் புரசலாக அன்றைக்கே சொல்லிவந்தார்கள். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறது என்பது பாம்பிற்கும் புற்றிற்கும் தெரிந்த ரகசியம் மட்டுமே.
ஈரோடு எம்பி கணேச மூர்த்திக்கு மீண்டும் மதிமுகவில் சீட் ஒதுக்க வாய்ப்பில்லை. மேலும் ஈரோடு திமுகவின் வசம் செல்ல இருக்கிறதாம். ஏற்கனவே சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸிற்கு செலவு செய்தது போதும் என்று உடன் பிறப்புகள் எண்ணியிருக்கலாம்.
விருதுநகரைப் பொறுத்தவரை மாணிக்கத்தாகூர் வெர்சஸ் துரை வைகோ என்று சொல்லப்படுகிறது. கூட்டணியையே சிதைக்க நினைக்கும் திமுக ஒருபக்கம் என்றால், விருதுநகரில் காங்கிரஸும் மதிமுகவும் ஸ்பேரிங்க் போட்டுக்கொண்டு சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் துரை வைகோவிற்கு “ம்” கொட்டிவிட்டால், மாணிக்கத்தாகூர் சிவகங்கை பக்கம் சென்று கார்த்திக் சிதம்பரத்துடன் உள்கட்சி சண்டையை துவங்க வேண்டியதுதான். சிவகங்கையில் சண்டை வலுத்தால், இருக்கவே இருக்கிறது தேனி. அந்தப் பக்கமாக மாணிக்கத்தாகூரை தள்ளிவிட வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
திருச்சியை எடுத்துக்கொண்டால், திருநாவுக்கரசருக்கு கே.என்.நேரு பெரிய தடையாக இருக்கலாம். நேரு தன் வாரிசுக்கு சீட்டுக் கேட்டு முதன்மை வாரிசுக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்துவிட்டார். இனி திருச்சி திருநாவுக்கரசருக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இப்படி கூட்டணிக்குள் சண்டை வளர்த்து, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்கிற காமெடி போல திமுக ஆகிவிட்டது. இந்த நிலையை உற்று நோக்கும் அரசியல் விமர்சகர்கள் உச்சுக்கொட்டி அந்தோ பரிதாபம் என்கின்றனர்.