செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இல்லலூர் கிராமத்தைச் சேர்ந்த குமார், ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இல்லலூரில் குமாருக்கு சொந்தமான நிலத்தை, திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் முதலே இப்பிரச்னை இருந்து வந்துள்ளது.
ஒருகட்டத்தில் அந்த நிலத்தை அபகரித்தே தீருவது என்று திமுக எம்எல்ஏவும், அவரது ஆதரவாளர்களும் முயன்றுள்ளனர். அந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டுமானால் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏவும், அவரது தந்தையும் மிரட்டல் விடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். ஆனால் பணத்தைக் கொடுக்க குமார் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த திமுக எம்எல்ஏவும், அவரது குண்டர்களும் அந்த இடத்தை ஆக்கிரமிக்க திரண்டுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த குமாரின் நண்பர்கள் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். அவர்களை திமுக குண்டர்கள் உருட்டுக் கட்டைகள், இரும்புத் தடிகள் கொண்டு சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்களது இருசக்கர வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.
இதையறிந்த குமார் அங்கு சென்றபோது, அவர் மீது திமுக எம்எல்ஏ இதயவர்மனும், அவரது குண்டர்களும் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். குண்டு பாய்ந்ததில் கார் கண்ணாடி உடைந்த நிலையில், காரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த தையூரைச் சேர்ந்த வியாபாரி சீனிவாசன் என்பவரின் இடுப்பில் குண்டு பாய்ந்தது.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் காவலர்கள், திமுக எம்எல்ஏ இதயவர்மனின் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கழிவறைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி, தந்தை லட்சுமிபதியுடன் அவர் தப்பியோடிவிட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வியாபாரி சீனிவாசனை, எம்எல்ஏ இதயவர்மன் கடத்திச் சென்றுவிட்டதாக, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்தார்.
பின்னர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் விசாரணை மேற்கொண்டார். துப்பாக்கிச்சூடு தொடர்பாக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் அதிபர் குமார் அளித்த புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்எல்ஏவின் உறவினர்கள் நிர்மல், வசந்த், யுவராஜ், ஓட்டுநர் கந்தன் ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தலைமறைவாகியிருந்த எம்.எல்.ஏ. இதயவர்மனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மேடவாக்கத்தில் பதுங்கியிருந்த எம்.எல்.ஏ இதயவர்மனை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் உள்ளிட்ட 7 பேரும், செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ இதயவர்மனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நில அபகரிப்பும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போன்றது. துப்பாக்கியைக் கொண்டு நிலஅபகரிப்பில் திமுக எம்எல்ஏ நேரடியாக ஈடுபட்டுள்ளது ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
Discussion about this post