பொன்னமராவதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது, கூட்டணிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் சாலையில் படுத்தும், கைதட்டியும் உற்சாகமாக ஆதரவு கொடுத்தது, காங்கிரஸை மதுவுக்கு எதிரான போராட்டம் நடத்த தூண்டியிருக்கிறது. எங்க ரேஞ்சே வேற என்னும்படி மதுப்பிரியர்கள் அலப்பறை கொடுத்தது குறித்து பார்ப்போம்.
மதுப்பிரியர்கள் இருவர் ஏகத்துக்கும் ரகளையில் ஈடுபட்ட இந்த சம்பவம், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அரங்கேறி உள்ளது. மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பேருந்து நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தின்போதுதான் மதுப்பிரியர்களான திமுகவின் உடன்பிறப்புகள் இருவர் இப்படி ஆட்டம் காட்டி உள்ளனர்.
சாலையில் இருந்து கண்டன கோஷங்களை உச்சஸ்தானியில் காங்கிரசார் எழுப்பிக் கொண்டிருக்க, அதனை தனக்கான தாலாட்டுப் பாடலாகவே பாவித்து, சாலையையே படுக்கையறையாக மாற்றினார் மதுப்பிரியர் ஒருவர்.
இன்னொரு மதுப்பிரியரோ, நானும் இங்கே இருக்கிறேன்… என்னையும் கவனிங்க என்றபடி இஷ்டத்துக்கு கையைத் தட்டியபடி காங்கிரசாரை கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில் மதுப்பிரியர்களின் அலம்பல் தாங்காமல், சாலையில் படுத்திருந்தவரை, இருவர் தூக்கிச் சென்று மற்றொரு மதுப்பிரியருடன் சேர்த்து வைக்க ஜோடி போட்டு அவர்கள் பண்ணிய அதகளமோ வேறு ரகம்.
காங்கிரஸார் கண்டனம் தெரிவித்து நடத்திய போராட்டத்திற்கு மதுப்பிரியர்களான அந்த திமுகவினர் கொடுத்த ஆதரவு அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும், ‘நல்ல கூட்டணிப்பா’ என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்க வைத்தது.