நீர் மேலாண்மையில் திமுக தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அதிமுக அரசின் சாதனைகளை மூடி மறைக்க பார்ப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகனுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது, நதிநீர் பிரச்சனைக்கு துரும்பை கூட கிள்ளிப் போடாத திமுக, அதிமுக அரசின் நீர் மேலாண்மையின் செயற்கரிய செயல்பாடுகளை விமர்சிப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தான் காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழக உரிமைகள் தாரைவார்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
அதிமுக அரசின் தொடர் சட்டப்போராட்டத்தால் காவிரி நடுமன்ற இறுதி ஆணை மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் மத்திய அரசிதழில் வெளியானதை அவர் சுட்டிக்காட்டினார். முல்லைப் பெரியாறு அணை விஷயத்திலும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காத திமுக, நீர் மேலாண்மை பற்றி பேச தகுதி இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
திமுகவினரின் பேச்சளவில் இருந்த அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு 1652 கோடி ரூபாய் ஒதுக்கி திட்டப் பணிகளை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். நீர் மேலாண்மையில் திமுக தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல், அதிமுக அரசின் சாதனைகளை மூடி மறைக்க பார்ப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Discussion about this post