தீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவார்கள். குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பேருந்துகள், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு முன்கூட்டியே செல்வது வழக்கம். நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவார்கள்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ம் தேதி வருவதால் முன்னதாக நவம்பர் 9-ம் தேதியே சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். எனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூலை 12-ம் தேதியில் இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 12-ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அதன்படி ஜூலை 12-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ம் தேதியும், 13-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10-ம் தேதியும், 14-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11-ம் தேதியும், 15-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 12-ம் தேதியும், 16-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 13-ம் தேதியும், 17-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 14-ம் தேதியும், 18-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 15-ம் தேதியும் பயணம் செய்து கொள்ள முடியும். மேலும் மக்கள் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள மக்களுக்கு ரயில்வே துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.