உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு அரிய இலக்கியம், அறிவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும், உலக அமைதிக்குப் பாடுபட்டவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் யாரெல்லாம் இந்தப் பரிசை வெல்லப்போகிறார்கள் என உலகமே உற்று நோக்குகின்றது.
விருதைப் பெறுபவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய கவுரவத்தை அளிக்கும் நோபல் பரிசை இதுவரை எத்தனை பெண்கள் பெற்றுள்ளனர் எனக் கணக்கிட்டால் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர். 1901 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை 892 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 48 தான். குறிப்பாக அறிவியல் துறையில் மிகக் குறைந்த அளவில் பெண்கள் விருது பெற்றுள்ளனர்.
1903 ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் நோபல் விருது பெற்ற முதல் பெண் மேரி கியூரி ஆவார். அவரைத் தொடர்ந்து வேதியியலில் 2018 ஆம் ஆண்டு பிரான்செசு ஆர்னேல்டு எனச் சிலர் அறிவியல் துறையில் விருது பெற்றுள்ளனர்.
1901 இல் இருந்து 2018 வரை இயற்பியல் பிரிவில் 111 நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு 207 பேருக்கு வழங்கப்பட்டன. இவர்களில் பெண்கள் 2 பேர் மட்டுமே. வேதியியல் பிரிவில் 109 பரிசுகள் அறிவிக்கப்பட்டு 178 பேருக்கு விருது வழங்கப்பட்டது. அவர்களில் பெண்கள் 4 பேர் மட்டுமே.
இப்படி அறிவியல் துறைகளில் பெண்கள் பெரும்பாலும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் பெண்களின் ஆய்வுகள் பெரிய அளவில் வெளியுலகை அடைவதில்லை எனக் கூறும் ஆர்வலர்கள், பரிந்துரைகளில் இருந்தே மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் எனக் கூறுகின்றனர்.
பல நேரங்களில் ஆய்வுகளில் பெரும்பங்காற்றி இருந்தாலும், அதில் இடம் பெற்றுள்ள ஆண்களுக்கே பரிசு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் தகர்த்து இந்த 2019 ஆம் ஆண்டாவது பெண்கள் அதிக அளவில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்த்து வருகின்றனர் பெரும்பாலானோர்.