சென்னை வெள்ள இடர் தடுப்பு மற்றும் மேலாண்மை குழுவின் கருத்து கேட்பு கூட்டத்திற்கு, அரசுக்கு ஆதரவான சங்கங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து, ஞாயிறன்று ரகசியமாக கூட்டம் நடத்தி கருத்து கேட்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில், சென்னை வெள்ள இடர் தடுப்பு மற்றும் மேலாண்மை குழுவினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
கடந்த வாரம் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்திய இந்த குழுவிடம், வெள்ள பாதிப்புகளை தடுக்க இடைக்கால திட்ட அறிக்கை வழங்க கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், எந்தவித முறையான அறிவிப்பும் வெளியிடாமல், இதற்கான கருத்து கேட்பு கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றுள்ளது.
அரசு விடுமுறை நாளான நேற்று, அரசுக்கு ஆதரவான சங்கங்கள், தொண்டு நிறுவனங்களை மட்டும் அழைத்து, கருத்து கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடந்தியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, வெள்ள பாதிப்பு தொடர்பாக அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை பெறும் வகையில் வெளிப்படையான கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.