விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே அரசு பள்ளியில் டிஜிட்டல் முறையில் கல்வி பயிற்றுவிக்கப்படுவதற்கு மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
காரியாபட்டி அருகே உள்ள கடைக்கோடி கிராமமான கம்பாளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. அரசு பள்ளிகளை தரமுயர்த்தும் தமிழக அரசு முயற்சியின் ஒருபகுதியாக இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
சில வருடங்களுக்கு முன்புவரை இந்த கிராமத்தில் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த மாணவர்கள் கூலித் தொழிலாளர்களாக மாறிய சூழலும் இருந்த நிலையில், தற்போது தனியார் பள்ளிகளுக்கே சவால்விடும் வகையில் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சியை இந்தப் பள்ளி பெற்று வருகிறது. சிறந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டுள்ளது.