தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆசியாவிலேயே சிறந்த காவல்துறையைக் கொண்டுள்ள கொண்டுள்ள மாநிலமாகத் திகழ்ந்துகொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட மக்கள் சேவையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கே பிரச்சினை வரும்போது அவர்கள் எங்கு சென்று முறையிடுவார்களோ? என்ற கேள்வி நம் அனைவர் உள்ளும் எழுகிறது. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக காவல்துறை அதிகாரிகள் தற்கொலையை நாடுகின்றனர். ஏன் எதற்காக இப்படி அவர்கள் நடந்துகொள்ள வேண்டும்? மனரீதியான பிரச்சினைகள் தீர்ப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும்?
கோவை டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை…!
கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த காவல்துறை அதிகார் விஜயகுமார் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவையில் மாநகர பந்தய சாலையில் காவல்துறை மேற்கு மண்டல முகாம் அலுவலத்தில் இன்று காலை பணியிலிருந்த போதே விஜயகுமார் தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் இவரின் தற்கொலைக்கான காரணத்தை குறித்து முதல் கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.
டி.ஐ.ஜி விஜயகுமாரின் பின்னணி..!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் விஜயகுமார். இவர் ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பாகவே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். அந்தப் பணியிலிருந்த போதே 2009ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்று காவல்துறைப் பணியில் இணைந்தார். காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. சென்னை அண்ணா நகர் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்த இவர் கடந்த ஜனவரி ஆறாம் தேதியில் கோவை மாவட்டம் சரக டி.ஜ.ஜியாக பதவி உயர்வு பெற்றார்.
டி.ஐ.ஜியின் தற்கொலை எப்படி நடந்தது?
நேற்றைக்கு இரவு காவல்துறை அதிகாரி ஒருவரின் மகனுக்கு பிறந்தநாள் இருந்ததையொட்டி அப்பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பியுள்ளார் விஜயகுமார். இதைத் தவிர கடந்த 2 நாட்களாக விஜயகுமார் தீவிர மன உளைச்சலில் இருந்ததாக சக அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இன்று அதிகாலை நடைப் பயிற்சி முடித்து திரும்பிய அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். விஜயகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட இருக்கிறது. இன்று மாலை நல்லடக்கம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த இறுதி மரியாதையில் டிஜிபி சங்கர் ஜிவால் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்த இருக்கிறார்.
திமுக ஆட்சியில் தொடரும் காவலர்களின் தற்கொலை…!
அக்டோபர் 5, 2021 ஆம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அனில்குமார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த எஸ்.ஐ. கவுதமன் தனது வீட்டில் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறக்கும்போது அவரது பணிக்காலம் ஓராண்டுக்குள் முடிவடையும் தருவாயில் இருந்தது.
இதேபோல செப்டம்பர் 2021ல் காட்பாடி, சேவூர் 15வது சிறப்பு காவல் படையணியில் பணிபுரிந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார், காவலர் குடியிருப்பிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஏப்ரல் 29 அதிகாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுக வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த வேலூரைச் சேர்ந்த கடற்படைக் காவலர் ராஜேஷ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நான்கு காவலர்கள் தற்கொலை செய்துகொண்டிருந்தது பெருத்த அதிர்வினை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இந்த விடியா திமுக அரசின் முதல்வர் இதனைக் கண்டுகொள்ளாமல் இரங்கல் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்கிறார்.
காவலர்களின் பிரச்சினைகள் என்ன? உளவியல் ரீதியாக அவர்கள் எந்த மாதிரியான துயரத்திற்கு உள்ளாகிறார்கள்? அதற்கான் தீர்வுகளை எப்படி கொடுக்கலாம்? போன்ற நடவடிக்கையில் திமுக ஈடுபடாமல் பம்மாத்து பண்ணிக்கொண்டிருக்கிறது. அதுவும் காவல்துறையைத் தன் கட்டுக்குள் வைத்துள்ள முதல்வர் நிர்வாகத் திறமையன்றி செயல்படுவது பட்டவர்த்தனமாகவேத் தெரிகிறது. திமுக தேர்தல் வாக்குறுதியில் காவலர்களுக்கு ஆறு நாட்கள் வேலை மற்றும் ஒருநாள் வார விடுப்பு என்று சலுகையை அறிவித்துதான் ஆட்சிக்கட்டில் ஏறியது. ஆனால் காவலர்களில் உயர் அதிகாரிகள் மட்டும் தன் விருப்பத்துக்கேற்ப விடுப்புகள் எடுத்துக்கொள்கின்றனர். கடைநிலைப் பதவிகளில் இருக்கும் காவல் அதிகாரிகளுக்கு விடுமுறை என்பது கானல் நீரே. அவர்களுக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து வேலை இருந்துகொண்டே இருக்கும். அரசின் அலட்சியமே இதற்கு முதன்மைக் காரணமாக இருக்கிறது. அடிக்கொருமுறை சில உளவியல் சார்ந்த கூட்டங்களை காவலர்களுக்கு நடத்தி அவர்களின் பணிச்சுமையினால் ஏற்பட்ட மனச்சுமையினை குறைக்க இந்த அரசு வழிவகை செய்திருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பதால் மரணங்கள் தொடர்கின்றன.
தற்கொலைக்குத் தீர்வு என்ன?
“மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)”
சேவைத்துறையான காவல்துறைக்கு பணிச்சுமையானது அதிகம். அப்பணிச்சுமையின் பொருட்டும், தனிப்பட்ட காரணங்கள் பொருட்டும் தற்கொலையானது நிகழ்கிறது என்று உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை தடுப்பதற்கு ஒவ்வொரு காவலர்களுக்கும் நேர்மறையான சிந்தனை அவசியம் வேண்டும். குறிப்பாக தனது பிரச்சினைகளை சக காவலர்களிடம் தெரிவிப்பது அவசியம். கடைநிலைக் காவலர்களிடம் எந்த பாரபட்சமும் பாராமல் மேலதிகாரிகள் அவர்களின் பிரச்சினைகளை கூறுவதற்கு வாய்ப்புகள் தரவேண்டும். மனித சமூகத்திற்கு முக்கியத் தேவையாக அன்பும் அரவணைப்பும் உள்ளது. இதனை ஒரு மனிதன் சகமனிதனுக்கு சகிப்புத் தன்மையுடன் வழங்குதல் தலையாயக் கடமையாகும். அதிலும் இதுபோன்ற காவலர் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு உள ரீதியான மேலதிக அன்பும் பிரச்சினைகளை பகிர்ந்துகொள்வதற்கு சக மனிதனும் தேவை.