தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 15ஆம் தேதி தமிழர் திருநாளான ’தைப்பொங்கல்’ விழாவானது மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெரும்பாலும் ஒவ்வொரு ஊர்களிலும் பொங்கல் தினத்தன்று விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். குறிப்பாக, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு பெயர்போன மாநிலம் ஆகும். ஆனால், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பொங்கல் விழாவினை சற்று வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் முக்கால்நாயக்கம்பட்டி எனும் கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் பொங்கல் விழாவினை ஒட்டி சாப்பாட்டு ராமன் போட்டி நடைபெற்றது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் போட்டிக்காக சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, ஐஸ்கிரீம் சாப்பிடும் போட்டி ஆகியவை தனித்தனியாக நடைபெற்றது. 1 கிலோ சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டியில் முப்பது பேர் கலந்து கொண்டார்கள். அவர்களில் கஜேந்திரன் என்பவர் ஐந்து நிமிடத்தில் 1 கிலோ பிரியாணியையும் சாப்பிட்டு முதலிடம் பிடித்தார். இதேபோல் பெண்களுக்கும் 1 கிலோ சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி நடந்தது. அதனைத் தொடர்ந்து 1 கிலோ சிக்கன் 65 சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பத்து நிமிடத்தில் 1 கிலோ சிக்கன் 65-யைச் சாப்பிட்டு வெற்றிவேல் என்பவர் முதலிடம் பிடித்தார். பதினான்கு நிமிடத்தில் 1 கிலோ சிக்கன் 65-யைச் சாப்பிட்டு சுரேந்தர் என்பவர் இரண்டாம் இடம் பிடித்தார்.
அடுத்ததாக, ஐஸ்கிரீம் சாப்பிடும் போட்டியானது நடைபெற்றது. போட்டியாளர்களுக்கு அரை கிலோ ஐஸ்கிரீமானது சாப்பிட கொடுக்கப்பட்டது. போட்டியில் வெல்ல வேண்டுமென்கிற தன்முனைப்பில் குளிர்ச்சியையும் பொருட்படுத்தாமல் ஸ்பூனையும் பயன்படுத்தமால் குளிரக் குளிர கைகளிலேயே ஐஸ்கிரீமை அள்ளி சாப்பிட்டார்கள் போட்டியாளர்கள். இந்தப் போட்டியில் வெறும் ஏழே நிமிடத்தில் அரை கிலோ ஐஸ்கிரீமையும் சாப்பிட்டு ராஜ்குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். முக்கால்நாயக்கம்பட்டியில் உள்ள பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை இந்த சாப்பாட்டு ராமன் போட்டியில் மகிழ்ச்சியாக கலந்துகொண்டனர். இந்தப் போட்டியின் காணொளி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகப் பகிரப்பட்டும் பரவியும் வருகிறது. பண்டிகைகளை என்பது சொந்தங்கள் சூழ கொண்டாடுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. இங்கு ஒரு கிராமமே இதுபோன்ற விநோதப் போட்டியினை நடத்தி, சண்டைச் சச்சரவுகள் இல்லாமல் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவது என்பது மானுடப் பண்பின் முக்கியமான உதாரணம் ஆகும்.
Discussion about this post