மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி பேச்சுவார்த்தை காரணமாக ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதேபோல், காங்கிரஸுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது.
இதில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மொத்தம் 161 தொகுதிகளை இந்தக் கூட்டணி கைப்பற்றியது. காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மொத்தம் அந்த கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியை பிடிக்க 145 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சிவசேனா ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டது.
இதனிடையே இவ்விரு கட்சிகளுக்கு இடையே ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார். இதனையடுத்து, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டு வரும் இழுபறி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.