குடியுரிமைச் திருத்தச் சட்டம்- பொய்களும்….. விளக்கங்களும்……

குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பொய்யான தகவல்களைக் கூறி மக்களிடம் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இசுலாமிய அகதிகள் மதரீதியாகப் புறக்கணிக்கப்படுகின்றனர் – என்பது முதல் பொய்.
 

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது அடிப்படையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த அகதிகள் தொடர்பான சட்டம் ஆகும். இந்த 3 நாடுகளும் இசுலாமிய நாடுகள். இந்த நாடுகளில் இசுலாமியர் அல்லாதவர்கள்தான் சிறுபான்மையினராக உள்ளனர், அவர்களே அதிகப் பிரச்னைகளுக்கும் ஆளாகி அகதிகளாக வெளியேறுகின்றனர். அவர்களுக்கு அருகே உள்ள ஒரே மதச்சார்பற்ற நாடு இந்தியா என்பதனால்தான் இங்கு வருகின்றனர். எனவேதான் குடியுரிமைத் திருத்தச்
சட்டத்தின்படி சலுகை பெறும் மதங்களின் பட்டியலில் இசுலாமிய சமயம் இல்லை. இதைக் கொண்டு ‘இசுலாமிய சமயம் புறக்கணிக்கப்படுகின்றது’ – என்று சொல்வதை ஏற்க முடியாது.
 
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி, இசுலாமிய அகதிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளன – என்பது இரண்டாவது பொய்.
 
முன்னர் அகதிகள் இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கு மேல் தங்கி இருந்தால்தான் குடியுரிமை என இருந்தது மாற்றப்பட்டு தற்போது 6 ஆண்டுகளுக்கு மேல் தங்கி இருந்தால்கூடக் குடியுரிமை வழங்கப்படும் என மாற்றப்பட்டு உள்ளது. உண்மையில் இதன் மூலம் பிற 6 மத அகதிகளுக்குப் புதிய சலுகை அளிக்கப்படுகிறதே தவிர, இசுலாமிய அகதிகளுக்கு முன்பு இருந்த எந்தச் சலுகையும் உரிமையும் இதனால் பறிக்கப்படவில்லை.
 
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி இசுலாமிய அகதிகள் இந்தியாவில் இருந்து உடனே நாடுகடத்தப்படுவார்கள் – என்பது மூன்றாவது பொய்.
 
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் எந்த இடத்திலும் இப்படிக் கூறப்படவில்லை. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இந்தியாவில் இருந்தால், அவர்களை நாடு கடத்துவதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்படாது, நாடு கடத்துவது தொடர்பான நடைமுறைகளில் ஏற்கெனவே உள்ள பழைய சட்ட விதிமுறைகளே பின்பற்றப்படும் – என மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து தனது செய்திக்  குறிப்பில் விரிவாகவே கூறி உள்ளது.
 
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி இந்தியாவில் உள்ள இசுலாமியர்களுக்குப் பாதிப்பு – என்பது நான்காவது பொய்.
 
அகதிகள் குறித்த இந்தச் சட்டம் இந்தியாவில் பிறந்த குடிமக்கள் யாருக்கும் பொருந்தாது. அதனால் எந்த மதத்தைச் சேர்ந்த இந்தியருக்கும் இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. இதனால்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்தது. இடைத்தேர்தல் தோல்வியால் ஏற்கெனவே அச்சத்தில் உள்ள திமுகவும், இசுலாமிய மக்களின் வாக்கு வங்கியை ஏமாற்றி அடையும் நோக்கத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் விவகரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிக் குளிர்காயப் பார்க்கின்றனர். இந்த அரசியல் வியாபாரிகளிடம் தமிழக மக்கள் ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும்.

Exit mobile version