தேனி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க இருக்கும் இடத்தை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டத்தில், அரசு சட்டக்கல்லூரி உருவாக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்த கல்வியாண்டிலேயே சட்டக்கல்லூரியை தொடங்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தியது. இதற்காக, வீரபாண்டியை அடுத்துள்ள சந்திரகுப்த மவுரியர் பள்ளியில் தற்காலிகமாக சட்டக் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்பட்டு, நிரந்தர கட்டடம் உருவாக்கப்பட்ட பின், அங்கு சட்டக்கல்லூரியை மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.
தற்காலிகமாக கல்லூரிக்கான அனைத்து வசதிகளும் சந்திரகுப்த மவுரியர் பள்ளியில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இதனை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், நிரந்தர சட்டக்கல்லூரி அமைவதற்காக, தேனி மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.