முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் தாயார் திருமதி தவுசாயம்மாள் அவர்கள், தனது 93 அவது வயதில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி கேட்டு பெரிதும் வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
“பெற்றெடுத்து பேணி வளர்த்து, சான்றோனாய் உயரச்செய்த அன்புத் தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும், அன்புச் சகோதரர் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூற வார்த்தையில்லை” என்றும் “தாயன்புக்கு நிகர் என்ன இருக்க முடியும்?” என்றும் தன் இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், “பாசமிகு தாயாரை பிரிந்து வாடும் அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், குடும்ப நண்பர்களுக்கும், எனது சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “மறைந்த தாயார் தவுசாயம்மாள் அவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும், அவரது நினைவுகளைப் போற்றி வணங்குகிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.