கட்டட அனுமதியை பெறுவதற்கான சிக்கல்கள் களையப்பட்டு, ஒற்றை சாளர முறையில் அனுமதி பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கிரிடாய் அமைப்பு நடத்தும் வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கண்காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமல்படுத்தப்பட்ட கட்டட விதிகளின் படி, குறைந்த அகலம் கொண்ட சாலைகளை ஒட்டிய மனைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிக தளங்களுடன் கூடிய கூடுதல் குடியிருப்புகள் கட்டிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதன்மூலம், மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் வீடுகளின் விலை கணிசமாக குறைவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பத்திரப்பதிவு கட்டணத்தை குறைப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.