வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி மாவட்டம் நாவல்பட்டில் 35 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள ஆயிரத்து 314 மனைகள் மேம்பாட்டு திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 245 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னை திருமழிசை துணைக்கோள் நகர திட்டம் குறித்தும், 289 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை தோப்பூர் உச்சப்பட்டி துணைக்கோள் நகர திட்டப் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள 6 ஆயிரத்து 580 மனைகள் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது இந்த திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உத்தரவிட்டார். சென்னை நகரில் பீட்டர்ஸ் காலனி, அருகம்பாக்கம், சாஸ்திரி நகர், அசோக் நகர், பெசன்ட் நகர் ஆகிய திட்டப் பகுதிகளில் குடியிருப்புகளுடன் கூடிய பன்னடுக்கு மாடி வணிக வளாகம் கட்டும் திட்டம் உடனடியாக செயல்படுத்த துணை முதலமைச்சர், அதிகாரிகளை அறிவுறுத்தினார். அதே போல், சென்னை கொரட்டூர், வேளச்சேரி மற்றும் அயப்பாக்கம் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் திட்டங்களை இந்த மாத இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். ஆலோசனைக் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.