தேனியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரிக்கு, நிரந்தர கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடங்கள் மற்றும் மதிப்பீடு தொடர்பாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். தேனி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சட்டக் கல்லூரிக்கு, தப்புகுண்டு கிராமத்தில் நிரந்தர கட்டடங்கள் மற்றும் விடுதி கட்ட, தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி, 89 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், புதிய கட்டடங்களுக்கான வரைபடங்கள் மற்றும் மதிப்பீடு குறித்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோர் ஆய்வு நடத்தினர். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேனி மாவட்ட பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். 400 மாணவர்கள் பங்கு பெறும் வகையில் கருத்தரங்கக் கூடம், காணொலிக்காட்சி அறை, ஓய்வு அறைகள், கணினி ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
Discussion about this post