மாநிலங்களவையில், 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைகப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு கூடியதும், விவாதமின்றி வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநிலங்களவையில் 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்தும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்திய பிறகும், கூச்சல் குழப்பம் நீடித்ததால், அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை, பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதே போன்று, மாநிலங்களவையிலும் 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, 12 எம்பிக்கள் மீதான இடைநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
கடந்த கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடந்த சம்பவத்தை வைத்து, தற்போது நடவடிக்கை எடுப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கமளித்த மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு, கடந்த மழைக்கால அமர்வின் கசப்பான அனுபவம் இன்னும் மனதை புண்படுத்துகிறது என்றும், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் வருத்தம் தெரிவிக்காததாலும், அதற்கு நேர்மாறாக தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயற்சிப்பதாலும், இடைநீக்கத்தை திரும்பப் பெற முடியாது என்றும் வெங்கைய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.
Discussion about this post