டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் தொடர்பாக பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஏற்றி வந்த சிறை வாகனத்தின் மீது, வழக்கறிஞர் ஒருவரின் கார் மோதியதால், அவருக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இது தொடர்பாக அத்துமீறி அந்த வழக்கறிஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. வழக்கறிஞரை விடுதலை செய்யுமாறு 8 வழக்கறிஞர்கள் சென்ற நிலையில், காவல்நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டதை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி நீதிமன்ற நீதிபதி டி.என்.பட்டில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசு, டெல்லி அரசு, டெல்லி போலீஸ் கமிஷனர், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், டெல்லியில் உள்ள அனைத்து மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம், டெல்லி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
இதனிடையே, காவல்துறையை கண்டித்து, இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.