ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தகவல்படி, அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
கடந்த 2022-23 நிதி ஆண்டில், முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ.68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. தமிழகத்துக்கு அடுத்ததாக ஆந்திரப் பிரதேசம் ரூ.51,860 கோடியும், மகாராஷ்டிரா ரூ.50 ஆயிரம் கோடியும் கடன் வாங்கி உள்ளன. இதற்கு முந்தைய 2 நிதி ஆண்டுகளிலும் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம்தான் இருந்தது. 2020-21 நிதி ஆண்டில் ரூ.87,977 கோடி கடன் வாங்கிய தமிழ்நாடு, 2021-22-ல் ரூ.87 ஆயிரம் கோடி கடன் வாங்கியது. இந்த இரண்டு நிதி ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில் தமிழகம் வாங்கிய கடன் சற்றே குறைந்துள்ளது. அதேநேரத்தில், நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ள கடன் அளவுக்குக் கீழ்தான் தமிழகம் கடன் பெற்றுள்ளது.
அதிக கடன் வாங்கும் 10 மாநிலங்களை ஆய்வுக்குட்படுத்தும்போது, கடந்த நிதி ஆண்டில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகியவை கடன் வாங்குவதை அதிக அளவில் குறைத்துள்ளன. 2022-23 நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் உத்தரப் பிரதேசம் ரூ.33,500 கோடி கடன் வாங்கி உள்ளது. 2021-22 நிதி ஆண்டில் இம்மாநிலம் ரூ.62,500 கோடி கடன் வாங்கி இருந்தது. சொந்த வரி மற்றும் வரியற்ற வருவாய் ஆகியவற்றின் அதிகரிப்பு காரணமாகவே, கடன் வாங்குவதை உத்தரப் பிரதேசம் குறைத்துள்ளது.
அதேநேரத்தில், ஆந்திரப் பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகியவை கடந்த 2021-22 நிதி ஆண்டில் வாங்கிய கடனைவிட 2022-23 நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் அதிக கடன் வாங்கி உள்ளன.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில் (ஏப்ரல்-ஜூன்) மகாராஷ்டிரா ரூ.25 ஆயிரம் கோடியும், தமிழகம் ரூ.24 ஆயிரம் கோடியும், ஆந்திரப் பிரதேசம் ரூ.20 ஆயிரம் கோடியும் கடன் வாங்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. உத்தரப் பிரதசேம் ரூ.18,500 கோடியும், ராஜஸ்தான் ரூ.15 ஆயிரம் கோடியும், பஞ்சாப் ரூ.12,700 கோடியும், மேற்கு வங்கமும் தெலங்கானாவும் ரூ.12,500 கோடியும் கடன் வாங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஹரியாணா ரூ.12 ஆயிரம் கோடியும், குஜராத் ரூ.11 ஆயிரம் கோடியும் கடன் வாங்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.
இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே மொத்த கடனில் 35 சதவீதத்தை வாங்கும் என ஐசிஆர்ஏ என்ற நிதி மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post