சோனியா காந்தி குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றது குறித்து மாநிலங்களவையில் கடுமையான விவாதம் நடைபெற்றது.
சோனியா, ராகுல், பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்தப் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுக்கொண்டது. இது குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய காங்கிரசின் ஆனந்த் சர்மா, நால்வருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பைத் திரும்பவும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். நால்வருக்கும் சிறப்புப் பாதுகாப்பு வழங்குவது தேசிய நலன் சார்ந்தது எனவும் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்துப் பேசிய பாஜகவின் சுப்பிரமணிய சாமி, ராஜீவ் படுகொலையை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து எனக் கூறிச் சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும், விடுதலைப்புலிகள் அமைப்பே இல்லாதபோது, ராஜீவ் குடும்பத்தினருக்குச் சிறப்புப் பாதுகாப்புத் தேவையில்லை எனவும் வாதிட்டார்.