பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை மற்றும் வெள்ளத்தால் பீகார் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாட்னாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த மழையால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.
வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அனைவரும் வீட்டின் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட்டுள்ள மீட்பு குழுவினர், படகுகள் மூலம் சென்று வீடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.
கயாவில், வீட்டுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். உத்தரகண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் மழை மற்றும் வெள்ளத்திற்கு 13 பேர் பலியாகினர்.
இதேப்பொல் மழையால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.