ஆபத்தாக இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள்! சரிசெய்யுமா அரசு?

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணிக்கும் குழந்தைகளின் அவல நிலை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. இதனை நாம் சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. பிஹாரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறான். இதற்கெல்லாம் மூடப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணறுகள்தான் காரணம். இதில் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா என்ன? தமிழ்நாட்டில் இருக்கும் கைவிடப்பட்ட திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கைவிடப்பட்ட குவாரிக் குழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தற்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறையின் அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சுஜித்தை, 83 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்டனர். இது தமிழக மக்களிடையே பெருத்த சோகத்தையும் அதிர்ச்சியையும் அன்றைக்கு ஏற்படுத்தியது. இந்த ஆழ்துளைக் கிணறுகள் அச்சுறுத்தலாக கால்நடைகளுக்கு உள்ளன. ஒரு புள்ளிவிவரத்தின் படி இந்தியாவில் சுமார் 2 கோடியே 70 லட்சம் கிணறுகள்- ஆழ்துளை கிணறுகளாக உள்ளன. இதனை மத்திய நிலத்தடி நீர் வரியமானது தெரிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு 2010 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றமானது ஆழ்துளை கிணறு விபத்துகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிக்காட்டிகளை வகுத்து அளித்திருக்கிறது.

அதன்படி, ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதற்கு உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெறுதல், தோண்டும்போதே சுற்றிலும் வேலி கட்டுதல், ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனஹ்தின் பெயர், நில உரிமையாளரின் பெயர்,  தோண்டும் கால அவகாசம் ஆகியவை குறித்த தகவல் பலகையை நிறுவுதல், தோண்டிய கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனாலே தண்ணீர் வற்றிக் கைவிடப்பட்டாலோ உடனடியாக அதை மண்ணிட்டு மூடி, சிமெண்ட் மூலம் வாய்ப்பகுதியை அடைத்தல் அல்லது குழாயின் மேற்பகுதியை மூடிபோட்டு அடைத்தல், கிணற்றை மூடிவிட்டு தகவலை உள்ளாட்சி நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவின்படி, தமிழ்நாட்டில் ஆழ்துளை கிணறுகளின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகளின்போது உச்ச நீதிமன்றத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்தப் பணிகள் மேற்கொள்வதற்கு மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள பசுமை நிதி, மாவட்டக் கனிம நிதி ஆகிய நிதி ஆதாரங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய செயல்திட்டத்தை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கையாகச் சமர்பிக்க வேண்டும். அதனடிப்படையில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version