நாட்டில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அணை பாதுகாப்பு மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.
இந்தியாவில் சுமார் 5 ஆயிரத்து 200 பெரிய அணைகள் உள்ளன. 450 அணைகள் புதிதாகக் கட்டப்பட்டும் வருகின்றன. இவை தவிர ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர அணைகளும் உள்ளன. இவை அனைத்தின் பாதுகாப்புக்கும் ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்க தேசிய அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு கூறியது.
இந்நிலையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதா, பல மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கு இடையே, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவின் மூலம், நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பு, உறுதித்தன்மை கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்கான தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்க வகை செய்ய முடியும். மேலும் அணை உடைப்பு போன்ற பேரிடர்களை தடுக்க அணை பாதுகாப்பு தேசிய கமிட்டி அமைக்கப்படும்.
இந்தியாவின் முன்னணி நிபுணர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த மசோதாவின் வரைவு இறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.