அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிமுகம் செய்து பேசினார். அப்போது, நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 344 பெரிய அணைகள் உள்ளதாகவும், இவற்றில் 293 அணைகள், 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை என்றும், ஆயிரத்து 41 அணைகள், 50 முதல் 100 ஆண்டுகள் வரை பழைமையானவை என்றும் கூறினார்.
92 சதவீத அணைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதாக கூறிய கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த மசோதா மூலம் அமைக்கப்படும் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம், அணைகளைக் கண்காணிப்பது, அவற்றைப் பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
அணை தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே எழும் பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும் என்றும் மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு எந்த அதிகாரத்தையும் பறிக்கவில்லை என்று கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. அணைகள் மீது மாநில அரசுகளுக்குள்ள உரிமைகளை இந்த மசோதா முழுமையாகப் பறிப்பதாகவும், உடனடியாக மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.