பால்வளத்துறை அமைச்சரை நீக்கியது பத்தாது! அதிகாரிகளையும் நீக்கவேண்டும்! பால் முகவர்கள் கோரிக்கை!

பால்வளத்துறை அமைச்சரின் அதிரடி நீக்கத்தைபோன்று ஆவின் ஊழல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆவினுக்கான பால் கொள்முதலை, பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளும், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் பொது மேலாளர்களும் கடந்த காலங்களில் கண்காணிக்க தவறியதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் தனியாரை நோக்கி சென்றதின் விளைவால் ஆவினுக்கான பால் வரத்து கடுமையான வீழ்ச்சியை சந்தித்ததுள்ளதா பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

அப்போதிருந்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரும், அதிகாரிகள் தரும் புள்ளி விபரங்களை மட்டுமே நம்பினாரே தவிர உண்மையான கள நிலவரங்களை கவனிக்க தவறியதால் பால் மற்றும் பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தி, விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆவின் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக நேரிட்டதாக பால் முகவர்கள் புகார் கூறுகின்றனர். கடந்த 2 ஆண்டில் ஊதாரித்தனமான நிர்வாகம், ஊழல் அதிகாரிகள் என ஆவின் நிறுவனம் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றிருந்த நிலையில் அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கப்பட்டார்.

இன்றைய நிலவரப்படி, ஆவினின் தினசரி பால் கொள்முதல் மற்றும் பால், பால் சார்ந்த உபபொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் கண்டிப்பாக ஆவினிற்கு இழப்பை ஏற்படுத்தாது என்பது உண்மை தான் என்றாலும், ஆவின் நிர்வாகத்தில் உள்ள சில ஊழல் அதிகாரிகளால் மொத்த வருவாயில் பெரும்பகுதி தேவையற்ற திட்டங்களால் சுரண்டப்பட்டு, லாபத்தில் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக பால் முகவர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே திருவள்ளூர்-காஞ்சிபுரம் ஒன்றிய பொதுமேலாளரான ரமேஷ்குமார் மீதும், பால் கூட்டுறவுகளின் தணிக்கை இயக்ககம் கடுங்குறைகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள அவரைப் போன்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பட்டியலை எடுத்து அவர்களை உடனடியாக பணி நீக்கமோ, பணியிடை நீக்கம் செய்தோ அல்லது பொருளாதார தொடர்பில்லாத பிரிவை கொடுத்தோ அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, அவர்கள் ஏற்படுத்திய பொருளாதார இழப்பை கூட்டுறவு சங்க விதிகளின்படி வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும் பால் முகவர்கள் சங்கத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version