ஊழல் மகா சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுத்தவர் என வர்ணிக்கப்படுபவர் டி.ஆர்.பாலு. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதிகாக்கும் மன்மோகன் சிங்கே, தனது அமைச்சரவையில் டி.ஆர்.பாலுவை வேண்டவே வேண்டாம் என்று கூறினார் என சொல்லுவார்கள். அப்படி என்றால், டி.ஆர்.பாலு எப்படிப்பட்ட ஊழல் பேர்வழியாக இருந்திருப்பார் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். இவரைத்தான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த டி.ஆர். பாலு, இந்த முறை ஸ்ரீ பெரும்பதூர் தொகுதியை கேட்டு பெற்றுள்ளார். இதற்கு முன்பு இவர் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர்.
இவர் காலத்தில் தான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியும் எதற்காக என்றால், கடலில் மண்ணை வாரிக்கொட்டுவதற்காக அல்ல… மாறாக பணத்தை வாரிக்கொட்ட வேண்டும் என்பதற்காகவே, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் பிடிவாதம் பிடித்த கெட்டிக்காரர் இவர். சேது சமுத்திர திட்ட தொடக்கப் பணிகளின் போது, ஆயிரத்து 500 கோடி ரூபாயை அபகரித்தார் என்ற தகவலுக்கு இன்றளவும் பதில் அளிக்க முடியாமல் திணறுகிறார். டி.ஆர்.பாலுவை மீண்டும் அமைச்சராக்கக் கூடாது என்று கருணாநிதியே பிடிவாதம் பிடித்தாராம். அதற்கு காரணம், அடிக்கும் தொகையில் டி.ஆர்.பாலு கருணாநிதிக்கு கூட பங்கு தரமாட்டார் என்கிறார்கள்.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட போது, தமிழக மக்களின் எண்ணங்களை வலியுறுத்தாமல் நாடகமாடிய அமைச்சர்களில் முக்கியமானவர் டி.ஆர்.பாலு என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல், ராஜபக்ச அளித்த விருந்தில் பங்கேற்றவர்களில் இவரும் ஒருவர். தமிழர்களை கொன்றுகுவித்தவரோடு புன்சிரிப்போடு கைகுலுக்கியவர் பாலு என்பதை யாரேனும் மறக்க முடியுமா? தமிழர்களை கொன்றவர்களை, நன்றாக செய்தீர்கள் என கைகுலுக்கினாரோ என தமிழர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கும் டிஆர் பாலுவிடம் பதில் இல்லை…
கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலின்போது, டி.ஆர்.பாலு தனது சொத்துகளின் மதிப்பு 7 கோடியே 70 லட்சம் ரூபாய் எனக் கூறியிருக்கிறார். ஆனால், 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில், டி.ஆர்.பாலு பெயரிலும் அவரின் 2 மனைவிகளின் பெயரிலும் உள்ள அசையும், அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு, 20 கோடியே 15 லட்சத்து 55 ஆயிரத்து 307 என கூறியுள்ளார்.
பல்வேறு விளை நிலங்களை காட்டி அவற்றின் மதிப்பு 18 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த சொத்து விவரத்தின்படி, டி.ஆர். பாலுவின் சொத்து மதிப்பு, 2009 ஆண்டிலிருந்து 2014 வரை, ஏறத்தாழ 3 மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்தது.