கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு பிறப்பித்துள்ள 4வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளில் UNLOCK 1 என்ற பெயரில் மூன்று கட்டங்களாக கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறையில், ஜூன் 8ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள், விடுதிகள், வணிக வளாகங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக விலகலை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் செயல்படுவது குறித்து, ஜூலை மாதம் மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும், குறிப்பாக மாநில அரசுகள் பெற்றோரிடம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்கள் இயக்கம், மெட்ரோ ரயில்கள், திரையரங்கங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பாடு குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடையில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post