கடலூரில், துர்நாற்றம் வீசும் ரசாயன தொழிற்சாலைகளை மூட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் காரைகாடு கிராமத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், பத்துக்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் விடப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், காரைக்காடு, ஈச்சங்காடு, குடிகாடு, பிள்ளையார்மேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள், நோய் தொற்றுக்கு உள்ளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கடலூர்-சிதம்பரம் சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் போரட்டத்தை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை, உரிய இடத்தில் தெரியப்படுத்துவதாக அதிகாரிகள் உறுதியளித்த பின், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த போராட்டத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post