கடலூர் அரசு மருத்துவமனையில் உடலில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசித்து வரும் மணிகண்டன். கண்களில் பயரேகைகள் சுழன்றடிக்க பரிதவித்துக் கிடப்பவரின் நிலைக்கு காரணம் அவரது குடிப்பழக்கம்.
கொத்தனார் வேலைக்கு சென்று வரும் மணிகண்டன், சிறிய குடிசை வீட்டில் மனைவி கலைச்செல்வி மற்றும் 10 வயது மகள், 8வயது மகனுடன் வசித்து வருகிறார். மதுவுக்கு அடிமையான மணிகண்டன், தனது வருமானத்தில் அதற்காக செலவிட்டு வந்துள்ளார். அதுமட்டுமின்றி மதுபோதையுடன் வீட்டுக்கு வருவதை மனைவியும் குழந்தைகளும் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மனைவி கலைச்செல்வி பலமுறை எடுத்துக் கூறியும் மணிகண்டன் தனது மதுப்பழக்கத்தை நிறுத்தவில்லை. இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி வாக்குவாதமும் நிகழ்ந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த மணிகண்டன், குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு திட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கலைச்செல்வி கணவனின் உடலில் மண் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். இதனால் பதறிப்போய் ஓட முயற்சித்த மணிகண்டனின் மீது தீ பற்ற வைத்தவர், தனது தலையிலும் மண் எண்ணெய்யை ஊற்றிக் கொண்டுள்ளார்.
மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து மணிகண்டனை, ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் கலைச்செல்வி மீது நெய்வேலி தெர்மல் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீக்காயத்துடன் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எவ்வளவு சொல்லியும் மதுபோதையில் இருந்து திருந்தாத கணவன் உடலில் தீயை வைத்து மனைவி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.