நலத்திட்டத்திற்கான பணத்தை கையாடல் செய்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திமுக ஊராட்சி மன்றத் தலைவர், நலத்திட்டத்திற்கான பணத்தை கையாடல் செய்வது குறித்து கேள்வி எழுப்பிய துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால், ஊராட்சி மன்றக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பேர்பெரியான்குப்பம் ஊராட்சி மன்றத்தில், தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என 12 பேர் உள்ளனர். இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மணிவண்ணன் தனது சொந்த செலவிற்காக, மக்கள் பயன்பாட்டிற்கான பணத்தை கையாடல் செய்து வந்துள்ளார்.

இதற்கு துணை போகாமல், கேள்வி கேட்ட துணைத் தலைவர் கமலக்கண்ணனை பதவியிலிருந்து நீக்க திட்டமிட்ட அவர், அவசர அவசரமாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, கமலக்கண்ணனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். இதற்கு ஆதரவாக 4 உறுப்பினர்கள் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர்.

மற்றவர்கள் அனைவரும் கையாடல் குறித்து திமுக ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேள்வி எழுப்பியதால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய மணிவண்ணன், உறுப்பினர்களை ஒருமையில் பேசியதோடு, மிரட்டலும் விடுத்துள்ளார்.

தகவல் அறிந்து போலீசார் வருவதற்கு முன்பே கூட்டம் முடிந்து விட்டது அனைவரும் கிளம்புங்கள் என கூறிவிட்டு, ஊராட்சி மன்றத் தலைவர் மணிவண்ணன் அங்கிருந்து நழுவிச் சென்றார்.

Exit mobile version