வரும் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும்நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனைப் பணி இன்று தொடங்கியது.
இந்தக் கூட்டத்தொடரானது 14ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்கும்வகையில், திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் பேரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரவை கூடுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று 11ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சுகாதாரத் துறையினர் கொரோனா பாரிசோதனையை மேற்கொண்டுவருகின்றனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் மற்றும் பிற அரசு துறைகளின் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
Discussion about this post