மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். ஊரடங்கு இல்லாத நிலையில், நோய்த்தொற்றை தடுப்பது சவாலானது என்றும், கொரோனா தொற்று அதிகரிக்கும் விகிதம் கடந்த ஆண்டை விட அதிகமாக இருப்பதாகவும், மத்திய அமைச்சரவைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தினார்.
இந்தநிலையில், தமிழ்நாட்டில், நோய்த்தொற்றின் நேர்மறை விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் உள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைக்கு RT-PCR முறை 100 சதவீதம் பயன்படுத்தப்படுவதாகவும், நோய் தொற்று ஏற்பட்டவருடன் இருப்பவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 846 பகுதிகள் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளாக கண்டறியப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும், தேவைக்கேற்ப படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர் வசதிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அம்மா மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நோய்த்தொற்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.