பொறியியல் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். அப்போது 199.67 கட் ஆப் மதிப்பெண்களுடன் சஷ்மிதா என்ற மாணவி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தாகக் கூறினார். மாணவர்கள் தங்களது தரவரிசைப் பட்டியல் விவரங்களை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும், அக்டோபர் 8 முதல் 27 ஆம் தேதி வரை 4 கட்டங்களாக பொதுக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளதால், கல்லூரிகள் திறப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.