இந்த நாட்டில் ஒரு விவசாயி எதனை பயிரிட வேண்டும், எப்போது பயிரிட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்திற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டன என்பதற்கு உதாரணமாக நிகழ்ந்துள்ளது குஜராத் உருளைக்கிழங்கு விவகாரம். உருளைக்கிழங்கில் என்ன பிரச்னை என்று சாதாரணமான நினைத்துவிட வாய்ப்பு உண்டு. இதன்பின்னால் உள்ள சர்வதேச அரசியலை பேசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
இந்திய விவசாயிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய பிரச்சனை ஒன்று குஜராத் மாநிலத்தில் உருளைக்கிழங்கு வடிவில் வந்திருக்கிறது… ஆம், சிறியோர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைக்கும் வேதியியல் கலவையான லேய்ஸ் சிப்ஸ் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் FL 2027 என்ற உருளைக்கிழங்கு ரகத்தை விளைவித்தது குற்றம் என்று குஜராத் விவசாயிகள் மீது புகார் கூறியுள்ளது பெப்சிகோ நிறுவனம்…
FL 2027 உருளை கிழங்கு ரகத்திற்கு தாங்கள் காப்புரிமை பெற்றுவிட்டதாக கூறும் பெப்சிகோ, உரிய அனுமதியின்றி அதனை விளைவித்ததாக சபர்கந்தா மாவட்ட சிறுவிவசாயிகளான பிபின் படேல், சபில் படேல், வினோத் படேல் மற்றும் ஹரி படேல் ஆகியோர் தலா ஒரு கோடியே 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது… இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள், தங்களின் பாரம்பரிய விதை பரிமாற்ற முறையை பன்னாட்டு நிறுவனம் அழிக்க முயற்சிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்… தன் நிலத்தில் ஒரு பயிர் நல்ல விளைச்சலை கொடுத்தால், அதன் விதைகளை தனக்கு தெரிந்த பிறருக்கு கொடுத்து உதவுவது தான் விவசாயிகளின் வழக்கம்… அதன் அடிப்படையிலேயே குஜராத் விவசாயிகளும் FL 2027 ரக விதைகளை தங்களுக்குள் பரிமாற்றம் செய்துக்கொண்டுள்ளனர்… இந்த பாரம்பரிய முறையை தான் தவறு என்கிறது பன்னாட்டு நிறுவனமான பெப்சிகோ…
தங்களின் உரிமையை காக்கும் வகையில் பயிர் பன்மைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம் 2001ன் பிரிவு 39 அமைந்திருப்பதாக விவசாயிகள் கூறினாலும், அதேசட்டத்தில் உள்ள பிரிவு 64ஐ தமக்கு சாதகமாக பெப்சிகோ நிறுவனம் பயன்படுத்துகிறது… ஒருபுறம் தண்ணீர் பற்றாக்குறை, பருவமழை பொய்ப்பது, விவசாயக் கூலிகள் பற்றாக்குறை என இந்திய விவசாயம் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலை எதிர்கால அச்சத்தை உண்டாக்கி உள்ளது. இன்று குஜராத்தில் நடந்தது நாளை எங்கும் நடக்கலாம், அதற்கு முன் இந்திய விவசாயிகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது,….