வீட்டில் வளர்க்கும் பிராணிகளால் கொரோனா பரவ 100% வாய்ப்பில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

வீட்டில் வளர்க்கும் பிராணிகளால் கொரோனா பரவ 100% வாய்ப்பில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்திய மாநிலங்களிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்தந்த மாநிலங்களின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இந்திய மாநிலங்களில் தனது கணக்கை தொடங்குகிறது.

அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொரோனாவிடம் இருந்து மக்களை பாதுகாக்க முழுவீச்சில் போராடி வருகிறது. கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரே தினமும் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்து வருகிறார். எனினும், கொரோனா குறித்த பயம் பொதுமக்களுக்கு இருந்து வருகிறது.

மக்களின் இந்த பயத்தை போக்கும் வகையில்,  தங்களின் சந்தேகங்களை அமைச்சரிடம் பொதுமக்களே நேரடியாக கேட்பதற்காக “கொரோனா அச்சம் வேண்டாம்” என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு  நியூஸ் ஜெ ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில், ராஜுவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் டாக்டர்.ஜெயந்தி, கிங்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.காவேரி ஆகியோருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்து கொண்டார். ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவர் என்ற முறையிலும், சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையிலும் அமைச்சர் விஜயபாஸ்கர் பொறுமையாக பதிலளித்தார். அமைச்சருடன், இரு மருத்துவர்களும் கொரோனா குறித்த அச்சங்களை போக்கும் வகையில் எளிமையாக விளக்கினர். அமைச்சர் மற்றும் மருத்துவர்கள் அளித்த பதில்களில் இருந்து சிலவற்றை பார்க்கலாம்.

➤ வெயில் அதிகம் இருக்கும் இடத்தில் கொரோனா வராது என்ற தகவல் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

➤ பேஸ்புக், வாட்சப் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துபவர்கள், இந்த சமயத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும்.

➤ காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 27 பேரை தேடி கண்டுபிடித்து அவர்களை தனிமைபடுத்தினோம்

➤ 5 நாட்களில் இருந்து 10 நாட்களுக்குள்ளாக கொரோனா இருப்பதற்கான அறிகுறிகள் தெரிய வரும் – மருத்துவர்!

➤ சளி, காய்ச்சல் , இருமல் , மூச்சுத்திணறல் இருந்தாலே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

➤ அவசியம் ஏற்பட்டால் ஒழிய, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

➤ எல்லா காய்ச்சலும் கொரோனா காய்ச்சல் இல்லை; சளி , இருமல் வந்தாலே அது கொரோனா பாதிப்பு இல்லை; தேவையற்ற பயம் தேவையில்லை

➤ கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்துவந்தவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால், அவர்களை அணுகும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

➤ செல்லப்பிராணிகளால் கொரோனா பரவ 100% வாய்ப்பு இல்லை; மனிதரிடமிருந்து மனிதருக்கு தான் பரவுகிறது.

➤ அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்; அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் பகிருங்கள்.

➤ நோய் எதிர்ப்பு கொண்ட எந்த உணவையும் சாப்பிடலாம்; அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்; நில வேம்பு கஷாயத்தையும் குடிக்கலாம் .

➤ கொரோனா அதிகம் பாதித்த சீனாவிலேயே 100ல் 2% தான் இறப்பு விகிதம் இருக்கிறது; கொரோனா பாதித்த அனைவரும் இறந்துவிடுவார்கள் என்பது உண்மையில்லை.

➤ கேரளாவில் இருந்து தமிழகம் திரும்பியிருந்தால் மீண்டும் அங்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

➤ மத்திய அரசு அறிவுறுத்துவதற்கு முன்பிருந்தே மதுரை விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை தமிழக சுகாதாரத்துறை தொடங்கிவிட்டது.

➤ கொரோனா வந்தால் எந்த வித சூழ்நிலையையும் சமாளிக்க தமிழக அரசும், தமிழக சுகாதாரத்துறையும் தயாராக இருக்கிறது.

➤ தேவைக்கும் கூடுதலான அளவிற்கு மருந்து கையிருப்பு இருக்கிறது; 10 லட்சம் முகமூடிகள் தமிழக சுகாதாரத்துறையிடம் இருக்கிறது.

➤ கொரோனா தமிழகத்திற்கு வரக்கூடாது என்பதில் சுகாதாரத்துறை முனைப்புடன் செயல்படுகிறது; வந்தால் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறது.

➤ கொரோனா குறித்த அச்சம் தேவையில்லை; ஆனால், விழிப்புடன் இருங்கள்; எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது என்று அலட்சியமாக இருக்கவேண்டாம்

➤ கொரோனா பாதிப்புகள் காரணமாக தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற நிலை தற்போது தமிழகத்தில் இல்லை.

➤ கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்து தற்போது வரை கண்டறியப்படவில்லை; அதிக எதிர்ப்பு சக்தியுடன் இருந்தாலே கொரோனாவை குணப்படுத்தலாம்

➤ கேரளாவில் இருந்து வரும் தண்ணீரால் கொரோனா பரவும் என்ற அச்சம் தேவை இல்லை; கொரோனாவை தடுக்க கேரள அரசும் சிறப்பாக செயல்படுகிறது

➤ பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா பரவும் என்ற அச்சம் தேவையில்லை
பள்ளியிலும் கைகளை கழுவ வேண்டும்
வீடு வந்த பின்பும் கைகளை கழுவ வேண்டும்  

➤ கொரோனா பாதிப்புகள் உள்ள நாடுகளில் இருந்து ஊர் திரும்பியவர்கள் நலமுடன் இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறோம்.

➤ கொரோனா குறித்த அச்சத்தை உருவாக்க அரசு விரும்பவில்லை; கொரோனாவை அரசு பார்த்துக்கொள்ளும்; பொதுமக்கள் அரசு சொல்வதை கேட்கவேண்டும்.

Exit mobile version