நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக தொழில் பாதிப்பு, மன உளைச்சல் இருந்தாலும் இவை எவற்றையும் சந்திக்காமல் கம்பீரத்துடன் காணப்படுகிறது, தேனி மாவட்டத்தில் உள்ள 22 மலை கிராமங்கள்.
அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு, மருதையனூர், பெரியமூங்கில், சின்ன மூங்கில், பட்டூர், விக்ரமாதித்தன் தொழு, கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட டாப்ஸ்டேஷன், காரிப்பட்டி, உள்ளிட்ட 22 மலைக் கிராமங்களிலும் இதுவரை கொரோனா பாதிப்பே இல்லை என்றால் ஆச்சரியம் தான்.
உலகின் மூலைமுடுக்கெல்லாம் புகுந்த கொரோனா வைரஸ் இந்த மலைக் கிராமங்களின் உச்சிகளை தொட முடியாமல் தோல்வியையே தழுவி நிற்கிறது.
இந்த 22 மலைக் கிராமங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிருமிநாசினி தெளிக்கப்படவில்லை… முகக் கவசங்களை பயன்படுத்தவில்லை… கொரோனாவும் அணுகவில்லை. இந்தப் பகுதிகளுக்கு கொரோனா காரணமாக அரசு எந்த செலவும் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.
காரணம்… இயற்கையாக அமைந்துள்ள பாதுகாப்பு இடைவெளி. போதிய இடைவெளியுடன் கட்டப்பட்டுள்ள வீடுகள். ஒரு கிராமத்திற்கும் இன்னொரு கிராமத்திற்கும் இடையே ஒன்று முதல் இரண்டு கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. குறிப்பாக இங்கு வசிக்கும் மக்கள் அவர்கள் பகுதியில் இருந்து வெளியேறுவதும் இல்லை, மற்ற பகுதிகளுக்கும் செல்வதும் இல்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்களுக்குள்ளே சுய கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டது, கொரோனா அணுகாததற்கு முக்கிய காரணம் என கூறுகிறார் ஊர் தலைவர் பாண்டியன்.
கிடைக்கும் இயற்கையான உணவுகளைக் கொண்டே தினமும் தங்களுடைய பசியை ஆற்றி வருகின்றனர். FAST FOOD, SNACKS என்றால் என்னவென்று கூட இவர்களுக்கு தெரியாது. கொரோனா நோயிலிருந்து தப்பியதற்கு முறையான உணவு முறையும் முக்கிய பங்கு வகிப்பதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இயற்கையான மாசற்ற காற்றை சுவாசிக்கும் இவர்களுக்கு, செயற்கையான ஆக்சிஜனும் தேவைப்படுவதில்லை. இயற்கையான உணவு, இயற்கையான காற்று, சுய கட்டுப்பாடு. இவையே இந்த 22 மலைக்கிராமங்களையும் கொரோனாவில் இருந்து காப்பாற்றியுள்ளது என்றால் ஐயமில்லை.
நியூஸ் ஜெ.செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் விஜயராகவனுடன் செய்தியாளர் ராதாகிருஷ்ணன்
Discussion about this post