மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; கோயில்களில் தரிசனத்துக்கு தடை

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் நிலையில், முக்கிய கோயில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆடிபெருக்கிற்கு காவிரி ஆற்றில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை, ஆடிபெருக்கு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி ஆகிய விஷேச நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 9ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக அறநிலையத்துறை நேற்று அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பால், ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் கோயில் வாசலில் நின்றபடி வழிபாடு நடத்திவிட்டு ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

 செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் இன்றும், நாளையும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிற முருகன் கோயில்களிலும் இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், ஆகம விதிகளின்படி மூன்று கால பூஜைகளும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் சனிக்கிழமையன்று 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சை பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களை, இன்று முதல் 3 நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். நள்ளிரவில் இந்த அறிவிப்பு வெளியானதால் தகவல் தெரியாமல் ஏராளமானோர் தஞ்சை பெரிய கோயிலில் சாமி தரிசனம் செய்ய இன்று கூடினர். சுவாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில், சுவாமிமலை சுவாமிநாதர் கோயில், உப்பிலியப்பன் கோயில் உள்ளிட்ட அனைத்து முக்கிய கோயில்களும் மூடப்பட்டன. இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், பக்தர்கள் கோயில்களில் கூடினர். ஆடி கிருத்திகை விழா ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள், கோயில் வாயிலில் நின்றவாரே சுவாமி தரிசித்துவிட்டு சென்றனர்.

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடிமாத திருவிழாவையொட்டி, இன்று முதல் 3 நாட்களுக்கு கோயில் நடை அடைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஆடித்திருவிழாவில் மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக இந்த அறிவிப்பு திடீரென வெளியிடப்பட்டது. இதனால் அறிவிப்பு குறித்து தகவல் தெரியாமல் திருவிழாவுக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் உள்பட 4 முக்கிய கோவில்களில் நாளை முதல் 8ம் தேதி வரை நடைபெறும் ஆடித்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில், கள்ளழகர் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ஆகிய கோயில்களிலும் ஆடிகிருத்திகை விழாவில் நாளை முதல் 8ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 ஆடிபெருக்கையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயம், கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் பக்தர்கள் புனித நிராடவும், சுவாமி தரிசனம் செய்யவும் மாவட்டம் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கோயில்களில் பொதுமக்கள் சென்று வழிபடவும், புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 திருச்சியில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், வயலூர் முருகன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர், உச்சிபிள்ளையார், மாணிக்க விநாயகர் ஆகிய கோயில்களில் நாளையும், நாளை மறுநாளும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில், நாளை மற்றும் நாளை மறுநாள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இரண்டு நாட்களிலும் ஆகம விதிப்படி நடைபெற வேண்டிய அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். ஆடி கிருத்திகை, ஆடி பதினெட்டாம் நாள் மற்றும் ஆடி அமாவாசை ஆகிய விசேஷ நாட்களை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், நோய் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வருகிற 3ம் தேதி வரை மற்றும் வருகிற 8ம் தேதியன்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து என திடீரென அறிவிக்கப்பட்டதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடி கிருத்திகைக்காக திருச்செந்தூர் சென்ற பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மாவட்ட ஆட்சியரின் காலதாமத அறிவிப்பால் ஆத்திரமடைந்த பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் இன்று முதல் மூன்றாம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இல்லாததால் சுவாமி தரிசனத்துக்கு வந்த ஏராளமான பக்தர்கள் சோகமடைந்தனர். கோயில் மூடப்பட்ட நிலையில், அறநிலையத்துறை நியாமாக செயல்பட வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நித்திய பூஜைக்கு மட்டுமே அனுமதி என்றும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கோவிவில் மூடிய கதவுகளுக்கு வெளிப்புறத்தில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தனர்.

 

திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி சிறு வியாபாரிகள் மற்றும் ஆடிபெருக்கு விழா கொண்டாட வரும் பக்தர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

கொரோனா நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்த முருகன் கோயில்களும், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், தேவராஜ சுவாமி கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால், வெளியூரில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் ஏமாற்றம்

முருகன், அம்மன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை, ஆடிபெருக்கு உள்ளிட்ட விசேஷ நாட்களில் தரிசனத்திற்கு அனுமதியில்லை

திருச்செந்தூர் கோயிலில் 4 நாட்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பால் ஆத்திரமடைந்த பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஆடிபெருக்கிற்கு காவிரி ஆற்றில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்))

Exit mobile version