கிரிக்கெட் ரசிகர்களால் ‘தல’ என்று அழைக்கப்படும் மஹேந்திர சிங் தோனியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவர் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு இதோ…
சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், என பன்முகத் தன்மையோடு இருந்தாலும் டோனியை அனைவரும் விரும்புவது அவரது மிகச்சிறந்த கேப்டன்ஷிப்புக்கே என்றே சொல்லலாம். களத்தில் எத்தனை நெருக்கடி இருந்தாலும், பொறுமையாகவும் நிதானமாகவும் நிலைமையைக் கையாள்வார். இந்த ஒரு காரணத்திற்காகவே அவருக்குக் ‘கூல் கேப்டன்’ என்ற செல்லப் பெயரை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானதை அறிவோம். அதில் தோனி குறித்து ஏராளமான தகவல்களை அறிந்திருந்தாலும், அவர் குறித்து அறிந்திடாத விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக தோனியை பரிந்துரை செய்தது சச்சின் டெண்டுல்கர் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
சர்வதேச போட்டியில் முதன் முறையாகத் தோனி களமிறங்கியபோது, அவருக்குச் சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. அதன் பிறகு, அவரின் அர்ப்பணிப்பும் அதிரடி ஆட்டமும், அந்த மோசமான துவக்கத்தை எல்லாம் மறக்கடிக்கச் செய்தது.
தனது பள்ளி காலத்தில், கால்பந்து ஆட்ட கோல் கீப்பராகவும், பேட்மிண்டன் விளையாடுவதிலும் தோனி ஈடுபாடு காட்டிவந்தார். அப்பள்ளியின் கிரிக்கெட் கோச் கேஷவ் பானர்ஜிதான், தோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அடிக்கல் நாட்டினார்.
2007-ல் டி20 உலகக் கோப்பை, 2011-ல் ஒருநாள் உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி-ன் மூன்று கோப்பைகளையும் இந்திய அணிக்குப் பெற்றுத்தந்த, ஒரே கேப்டன் தோனிதான். இந்திய அணிக்கு அதிக ஒருநாள் போட்டிகளையும் தோனி வென்று கொடுத்திருக்கிறார். 110 ஒருநாள் போட்டியில் வெற்றி கண்டுள்ள தோனி, அசாருதீன் மற்றும் கங்குலி சாதனைகளை முறியடித்துள்ளார்.
இத்தனை சாதனைகளை படைத்த தோனி, புகழின் உச்சத்தில் இருந்தபோதே 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும், 2016 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தனது கேப்டன் பதவியை துறந்தார். பிரீமியர் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 முறை சாம்பியன் பட்டங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.
பைக் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் டோனி. கவாஸாகி நிஞ்ஜா ஹெச்2, ஹார்லே டேவிட்சன் ஃபேட்பாய், யமஹா ஆர்டி350, டுகாட்டி 1098 மற்றும் கான்ஃபடரேட் ஹெல்கேட் எக்ஸ்132 ஆகிய சூப்பர் பைக்குகள் அவரிடம் உள்ளன. தென் கிழக்கு ஆசியாவிலேயே ஹெல்கேட் எக்ஸ்132-வை வைத்திருக்கும் ஒரே நபர் தோனி தான்.
ராணுவத்தின் மீது மிகுந்த பற்று வைத்திருக்கும் டோனிக்கு இந்திய ராணுவத்திடம் இருந்து லெப்டினன்ட் கலோனல் என்ற கௌரவப் பதவி, 2011-ல் கொடுக்கப்பட்டது. ராஜிவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ விருதுகளையும் டோனி பெற்றுள்ளார்.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனியின் 38வது பிறந்த நாளையொட்டி ஐ.சி.சி இந்திய கிரிக்கெட்டை மாற்றியவர் என்ற தலைப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. ரசிகர்கள், சகவீரர்கள் தோனியை புகழ்ந்து பேசும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.