கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக குமாரசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கடந்த 18-ம் தேதி குமாரசாமி தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டபேரவையில் திங்கட்கிழமை தொடர்ந்தது.
முன்னதாக, ராஜினாமா கடிதம் கொடுத்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் சம்மன் அனுப்பினார். கூட்டம் தொடங்கியதும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே, நள்ளிரவு ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியே ஆகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா வலியுறுத்தினார். இதனால், இரவு 12 மணிவரை சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது.
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சி சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பை செவ்வாயன்று நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவையை இன்று காலை 10 மணி வரை ஒத்திவைத்த சபாநாயகர் ரமேஷ் குமார், மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
Discussion about this post