பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லை குறித்த புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை 8 வாரங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடமாற்றம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம், லாப நோக்கில் தனியாக டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களை கண்காணித்து விதிகளை பின்பற்றி கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்தினார்.
அரசை மிரட்ட, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி, இளைய சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய ஆசிரியர்கள் மீது கருணை காட்டாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் சமீப காலங்களில் ஒழுங்கின்மை, சட்டவிரோத நடவடிக்கைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இதுகுறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிமுகப்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். இந்த தொலைபேசி எண்ணை அனைத்து கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்ய வேண்டும் என்றார் அவர்.
புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, தனியாக டியூஷன் நடத்தும் ஆசிரியர்களுக்கு எதிராகவும் அந்த இலவச தொலைபேசி எண்களில் புகார் அளிக்க வசதி ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர்.