தமிழக அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அமல்படுத்தப்பட உள்ள ஒரே பொது பாடத்திட்டம் என்ற முடிவு ஒட்டுமொத்த கல்வி திட்டத்தை அழித்துவிடும் என்று கல்வி கூட்டு இயக்கம் எச்சரித்துள்ளது…. விடியா அரசு கொண்டு வரும் பொது பாடத்திட்டத்தை எதிர்பது ஏன்? என்பதை விரிவாக பார்ப்போம்.
தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒரே விதமான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை கடந்த செவ்வாயன்று அறிவித்திருந்தது. உயர்கல்வி மன்றம் உருவாக்கியுள்ள இந்த பொது பாடத்திட்டம் ஒட்டு மொத்த தன்னாட்சி கல்லூரிகளின் உரிமையை பாதிக்கும் செயல் என்று மக்கள் கல்வி கூட்டி இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் பேசிய மக்கள் கல்வி கூட்டி இயக்கத்தினர், இந்த பொது பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்தில் தன்னாட்சி கல்லூரிகள் இயங்குவதற்கு அர்த்தம் இல்லாமல் மாறிவிடும் என தெரிவித்தனர்.
பொதுப் பாடத்திட்டம் என்ற திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாணவ அமைப்புகளுடனோ, பேராசிரியர் குழுக்களிடமோ கருத்து கேட்காமல் அமல்படுத்த முயற்சிக்கும் விடியா அரசு, உயர் கல்வி துறையை பற்றி தெரியாமலேயே உயர்கல்வி துறையை இயக்கி வருகிறது என கல்வி கூட்டியக்கத்தினர் விமர்சித்துள்ளனர்.
தமிழ் பாடப்பரிவுகளில், மூத்த எழுத்தாளர்கள் பற்றிய பாடக்குறிப்புகள் இல்லை என்றும், புதுமைப்பித்தன், அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்ற தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய பாடங்கள் இல்லாமல், கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்கள் பற்றிய பாடங்களை வைப்பது ஏன் என்றும் மக்கள் கல்வி கூட்டு இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், உயர்கல்வி துறையின் குழப்பமான முடிவு எதிர்காலத்தில் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையே அழித்துவிடும் என்று மக்கள் கல்வி கூட்டு இயக்கம் எச்சரித்துள்ளது.